திருச்சிக்கு வேலை மாற்றலாகி வந்து இரண்டு ஆண்டுகளும் இரண்டு மாதங்களும் ஓடிவிட்டது. உண்மையில் நான் மாற்றல் கேட்டது சென்னைக்கு. ஆனால் உத்தரவு கிடைத்தது திருச்சிக்கு.
திருச்சிக்கு பணியிட மாறுதலில் வரப்போகின்றோம் என்பது தெரிந்த பின் இரவு துக்கத்திற்கு முன் தினம் கனவு தான், திருச்சிக்கு வந்த பின் அன்றாடம் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி.
தினம் அதிகாலை காவிரியில் குழந்தைகளோடு நீந்தி சுகமான நீராடல், வாரம் ஒருமுறையேனும் ஸ்ரீரங்கநாதர், உச்சிப்பிள்ளையார் தரிசனம், மாதந்தோரும் கல்லணை, தஞ்சாவூர் பிக்னிக், இன்ன பிற... கனவுகள்.
ஆனால் திருச்சி வந்த பின் காவிரி குளியல் எனக்கு கானல் நீராகிப்போனது. எப்போதாவது காவிரியில் தண்ணீர் திருச்சியை எட்டிப்பார்க்கும் போது நான் வேலை நிமித்தமாக சென்னை அல்லது பெங்களூரில் இருந்து கொண்டிருப்பேன்.
ஆறு மாதத்திற்கு முன் ஒருமுறை கிடைத்த சந்தற்பத்தில் மனைவி, குழந்தைகள் சகிதம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சென்று வந்தேன். அப்போது நீராட முடிய வில்லை.
இரண்டாவது முறையாக இன்று மீண்டும் அம்மா மண்டபம் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.
நேற்று அலுவல் முடித்து வீட்டிற்கு புறப்படும் போதுதான் உடன் பணிபுரியும் நண்பர் திரு. தர்மலிங்கம், "சார் நாளைக்கு காலையில காவிரிக்கு குளிக்க போகலாமா சார் " என்றார்.
சந்தோசமாக, "போயிட்டு வருவோம் சார் " என்றேன்.
"சார் நானும் வர்ரேன் சார்" என்றார் எங்களின் ஜூனியர் சுரேஷ்.
மூவரும் காலையில் ஏழுமணிக்கு TVS-டோல் கேட் அருகில் ஒன்று கூடி அதன் பின் அம்மா மண்டபம் சென்று குளிக்கலாம் என்று முடிவானது.
நான் வீட்டிற்கு வந்து குழந்தைகளிடம் காவிரிக்கு குளிக்கச் செல்லும் தகவலை சொல்ல குளந்தைகளும் அணிசேர்ந்து கொண்டனர்.
காலையில் 06.45 மணிக்கு செல்பேசி சிணுங்கியது. நல்ல தூக்கம். அரைத்தூக்கத்திலேயே அதன் சிணுங்கலை நிறுத்திவிட்டு மீண்டும் தூக்கம்.
மறுபடியும் 07.00 மணி, 07.15 மணி, 07.25 மணிக்கு செல்பேசி சிணுங்கவே ஒரு வழியாக எழுந்து அவசர அவசரமாக புறப்பட என் மகன் ஆதித்யாவும் கூடவே பைக்கில் ஒட்டிக்கொண்டான்.
அம்மா மண்டபம் சென்று சேர்ந்த போது மணி 08.00 ஆகிவிட்டது.
கூட்டம் நிறைய இருந்தது. நிறைய பேர் தர்பணம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
நண்பர்கள் இருவரும் நீராடிக்கொண்டிருந்தார்கள். நானும் ஆதியும் அவசர அவசரமாக உடைமாற்றிக்கொண்டும் என் செல்பேசியை பத்திரமாக பாண்ட் பாக்கட்டில் சுருட்டி வைத்துவிட்டும் நீராட நண்பர்களோடு கலந்து கொண்டோம்.
காவிரியில் நீர் வரத்து அதிகமாக இருந்தது. தொடர்ந்து ஒரேயிடத்தில் நிற்க முடியாத படி பாதத்திற்கு அடியிலிருந்த மண்ணை நீர் அபகரித்துச்சென்றது. குளியல் சுகமாகவே இருந்தது.
கண்கள் மட்டும் அடிக்கடி செல்பேசியை சுருட்டி வைத்திருந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வந்தது.
நாங்கள் குளித்துக்கொண்டு இருந்த இடத்திற்கும் சற்று கிழக்கு பக்கமாக நின்று ஒல்லியான தேகம் கொண்ட மனிதர் மட்டும் தன் கையில் இருந்த தூண்டிலில் அரைத்த சாதத்தை சிறிது எடுத்து தூன்டிலில் ஒட்டி தண்ணீரில் விசுவதும் மீனை பிடிப்பதுமாக தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவர் மீனைப் பிடித்த லாவகமும் சுறுசுறுப்பும் அழகும் இன்னும் கண்ணைவிட்டு மறைய மறுக்கின்றது.
ஒருமணி நேரம் குளித்துவிட்டு கரையேறும் போது அவரை, அனுமதியோடு என் காமரா செல்பேசியில் பதிவு செய்து கொண்டேன்.
அவர் நாங்கள் குளித்து முடிவதற்குள் அந்த ஒரு மணி நேரத்தில் பிடித்த மீனின் மதிப்பு ரூ.100/- இருக்கும்.
உழைப்பவன் எங்கும் பிழைத்துக்கொள்வான்.