/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

தாமிரபரணி

இது பாதம் பயணித்த...பயணிக்கும்...பயணிக்க... வேண்டிய பாதை...

My Photo
Name:
Location: திருநெல்வேலி, தமிழ் நாடு, India

பிறந்தது:- சிவஞானபுரம். வளர்ந்தது:- ஆவரைகுளம். பொழுது கழிந்தது:- மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த என் காணியாறு விளை. தற்போது:- காவிரிக்கரை.

Monday, October 08, 2007

ஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1

என்னங்க... அது என்ன தலைப்பு ஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... என்கின்றீர்களா?!...

அது ஒரு சுவாரஸ்யமான கதை. சின்ன வயது ஞாபகங்களை அசைபோட்டு பார்ப்பது சுவாரஸ்யம் நிரைந்தது தானே...

அந்த வகையில் இது எனக்கு மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த ஒன்று.

வாழ்க்கையில் நாம் அன்றாடம் சத்திக்கும் எத்தனையோ நிகழ்வுகள் மறந்து போகின்றது. நேற்றைய நிகழ்வுகள் கூட இன்று மறப்பது சகஜம். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் கூட பல நேரங்களில் மறந்து விடுகின்றது.

ஆனால் வாழ்க்கையில் மொட்டுக்களாய் அரும்பிக்கொண்டிருந்த வேளையில் நடந்த நிகழ்வுகள் இன்னும் பசுமரத்தில் அடித்த ஆணிபோல் செப்புத்தகட்டில் பொறித்த எழுத்துக்கள் போல் வெள்ளித்திரையாக இன்னும் மனதில் நினைவில் தேங்கி நின்று திகைக்க வைக்கின்றதே! இதை என்னவென்று உரைப்பது. இந்த நினைவுகளின் சுவடுகள் என்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றே நினைக்கின்றேன்.

அந்த நினைவுகளின் சுவடுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் எனக்குள் என்னையே நான் உற்று நோக்குவதை மகிழ்வாகவே நினைக்கின்றேன்.

அடுத்த பதிவில் பார்ப்போமா ஸ்டீபன் ஆசிரியரையும்…பீச்சாளி சந்திரனையும்...

Saturday, April 07, 2007

என் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்?

“என் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்?” நம்மில் பலர் வலை உலாவலின் போது இந்த கேள்வியை கடந்து வந்திருக்கலாம். உங்களில் சிலருக்குக்கூட இது கேட்கத்தோன்றி கேட்காமல் விட்டிருக்கலாம்.
இப்போது கூட மனதில் எண்ணங்கள் எழலாம்....
எனக்கு தெரிந்த ஒரு சிறிய வழிமுறையை தங்களுக்கு பகர்கின்றேன்.
மென்பொருள் வல்லுநர்களுக்கு இது.... சிறுபிள்ளைகள் பாடம்போல் தோன்றலாம். ஆனால் புதியவர்கள் பலருக்கு இது பனுள்ளதாக இருக்கலாம்... முயற்சித்துப்பாருங்கள்...

நீங்கள் Windows XP பயன்படுத்தினால் கீழ்க்காணுமாறு முயற்சி செய்யுங்கள். அதன் பின் Unicode தமிழை நீங்கள் Word, Excel, Access, Internet என்று எல்லாவற்றிலும் பயன் படுத்தலாம்.

* Start --->Control Panel ----> Regional and Languages Options----> Languages செல்லுங்கள்
* இப்போது தெரியும் இரண்டு Option-ல் Install files for complex script and right-to-left languages-ஐ Tick செய்யுங்கள். அதன் பின் Apply பட்டனை Press செய்யவும்.
* இப்போது கம்யூட்டர் Windows installation CD-ஐ CD Drive-ல் insert செய்ய வலியுறுத்தும் அதன்படி செய்யவும். இப்போது கம்யூட்டர் தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும் install செய்து விடும்.
* அதன் பின் கம்யூட்டரை Restart செய்ய வலியுறுத்தும். அவ்வாறு செய்யவும்.
* கம்யூட்டர் Restart ஆனவுடன் மீண்டும் Start --->Control Panel ---->Regional and Languages Options----> Regional Options செல்லுங்கள்.
* இப்போது தெரியும் Drop Down- menu-விலிருந்து Tamil-ஐ தெரிவு(Select) செய்யுங்கள். அதன் பின் Apply பட்டனை அழுத்துங்கள். இப்போது Start Menu Bar-ல் Language Icons EN/TA என தெரியும்.
* இனி நீங்கள் உங்கள் கம்யூட்டரில் Word, Excel, Access, internet இன்னும் பலவற்றிலும் Unicode தமிழை தடையின்றி பயன்படுத்தலாம்.( இதற்கு பின் உங்கள் கம்யூட்டரில் தமிழை பயன்படுத்த வேறு எந்தவித தமிழ் எழுத்துருக்களோ அல்லது தமிழ் செயலிகளோ தேவையில்லை)
* தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் இடையோ மாற Alt+Shift Key-ஐ பயன் படுத்தவும்.

Sunday, December 10, 2006

நண்பர்களின் இரத்த வேட்டை...

ஞாயிற்றுக் கிழமைண்ணாலே நமக்கு கொண்டாட்டம் தான்.

காலைல 10.00 மணிவரைக்கும் தூக்கம்...அப்புறமா மெதுவா எழுந்து அன்பான பொண்டாட்டி கையால அருமையான “டீ”...

பல்லு துலக்கறது பற்றி கேட்கறீங்களா?...

அட ஆடு, மாடுக என்ன பல்லா துலக்குது... டீ குடிக்கற வரையாவது அத சும்மா இருக்க விடுவோமே!...

அப்புறமா குளிக்கிறது...முகச்சவரம்...எல்லாத்துக்குமே ஒய்வுதான்...காரணம் சோம்பல் இல்லீங்க...

ஒரு நாள் வாரத்துல ஒரே ஒரு நாள் நாமும் தான் சோப்புக்கும் பிளேடுக்கும் ஓய்வு கொடுப்போமே என்கிற நல்ல எண்ணம் தான். ஆமா... ஓய்வு நமக்கு மட்டும் இருந்தா போதுமா?...அதுகளுக்கும் வேண்டாம்?...

அப்புறமா நமக்கு நண்பர்கள் ஜாஸ்திங்க...எப்பப் பாருங்க நம்மள சுத்தி பாடிகிட்டே இருப்பானுக...பொல்லாத பசங்க...ஒரு நிமிசம் கண்ணசந்தாலும் பிச்சி எடுத்துடுவானுங்க...அவ்வளவு குசும்பு.

நண்பர்கள பற்றி அப்புறமா சொல்ரேன்...இன்றைய கதாநாயகர்களே அவங்க தான்...அதுக்குமுன்ன கொஞ்சம் ஞாயிற்றுக்கிழமை ரொட்டீனுக்கு வர்ரேன்...

10.30க்கு நம்ம வீட்டு முட்டாள் பெட்டிக்கு (சத்தியமா நான் சொல்லலங்க...நம்ம பெரியவரு ஒருவர் சொன்னத சின்ன வயசுல கேட்ட ஞாபகம்.) முன்னாடி உட்கார்ந்தா...அப்புறமா எழும்பரது மதியம் 2.00 மணிக்கு மேல தாங்க.

அதுவர கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா ஜெயா-ல மக்கள் மன்றம், அப்புறமா விஜய்-ல ஏதாவது மொழிமாற்று படம்...
உண்மைலயே ஞாயிறு எனக்கு ஜாலிதான்...

பாவம் பொண்டாட்டி பிள்ளைங்க தான், வெளில போவோம் வெளில போவோம்னு நச்சரிப்பாங்க...நம்ம அதிஷ்டம் நம்ம அண்ணாச்சி வானம் மப்பும் மந்தாரமுமா இருந்தா தப்பிச்சுக்க ஏதுவாயிடும்.

இல்லாட்டியும் ஒண்ணும் கெட்டுப்போயிடாது...ஜாலியா பைக்ல ஒரு வீதி உலாதான்...

இன்னைக்கு அதிஷ்டம் நம்ம பக்கம். மதியம் வானம் நான் இப்ப கக்கட்டா அல்லது கொஞ்சம் நேரம் கழிச்சு மழைய கக்கட்டாண்ணு கேட்பது போல் இருந்தது.

அதனால இன்னைக்கு வீடேகதிதானுங்க...

அதனால மதியம் வீட்டின் பின் பக்கம் செடிகள் ஏதாவது நட்டு வைக்கலாமுண்ணு சின்ன ஆசை. வீட்டின் பின்பக்கம் சென்று செம்பருத்தி செடியில் இரண்டு மூன்று கம்புகள் ஒடித்து பதியம் வைக்கலாமுண்ணு உட்கார்ந்தேன்...

நம்ம அண்ணனுங்களுக்கு எப்படி மூக்கு வேர்த்ததுண்ணு தெரியல்ல...அதான் சொன்னேனுங்கல்ல... நமக்கு நண்பர்கள் ஜாஸ்திண்ணு... அதே நண்பர்கள் தான்.

சுத்தி சுத்தி வந்து ஒரே பாட்டு...

நேரம் போகப்போக எனக்கு பயங்கரமா எரிச்சல்...

சுத்தி சுத்தி நாலஞ்சு அடி...

பாவம்... நாலஞ்சு பேரு செத்துட்டானுங்க(அவன்/அவள் எப்படி எடுத்துக்கிட்டாலும் சரிதாங்க)...

அப்புறமா கொஞ்ச நேரத்துக்கு தொந்தரவு இல்ல. கொஞ்ச நேரத்துக்குப் பின்னாடி மீண்டும் அதே தொந்தரவு.

யாரப்பா அந்த நண்பர்கள்னு கேட்கரீங்களா?...

வேர யாரும் இல்லங்க நம்ம கொசு தான்...

மன்னிச்சிடுங்க...

நம்ம அண்ணாச்சி நம்ம மேல உட்கார்ந்து எப்படி சூடான இரத்த பானம் உரிஞ்சி குடித்ததுவிட்டு செல்கின்றார் என்று பாக்கரீங்களா?!...

என் ஆசை விபரீதமானது என்று எனக்கு தெரியும்.
ஆனாலும் சின்னதாக ஒரு தைரியம்.
ஏற்கனவே சிக்கன் குனியா வந்து போய்விட்டது. அதனால் இனி வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் இல்லை என்ற தைரியத்தால் துணிந்தேன்.

இவ்வளவு பில்டப் வேண்டாமோ...

சரி சரி காசா? பணமா? பில்டப்புக்கு...

படத்தப் பாருங்க...


நண்பர் இப்பத்தாங்க மெல்லமா இடது முளங்கையில் வந்து உட்கார்ந்து ஊசிய மெல்ல குத்தராரு. வலிக்கத்தான் செய்யுது என்ன செய்யரது... அடிக்கலாம் செத்துப் பூடுவாரே. அப்புரம் எப்படி படம் எடுக்கரதாம்...


ஊசிய நல்லா குத்திட்டாருங்க...வலி போயே போச்சு....


பாருந்க வயிரு கொஞ்சம் நிரம்பிட்டு...ஆனா ஆசை தான் விட்டபாடில்லை...


நல்லா வயிரு நிரம்பிட்டு...ஆனாலும் விட மாட்டேன்கிறாறு...நமக்கும் விரட்ட மனம் இல்ல. குடிக்க விட்டாச்சு குடிக்கிறது வர குடிக்கட்டும். அதையும் தான் பார்ப்போமே...


அப்பாடா...பரம திருப்திண்ணு நினைக்கிறேன். நல்லா குடிச்சிட்டு ஊசிய மெல்லமா எடுக்கறாரு...

அடச்ச...அடுத்தப் படம் எடுக்கறதுக்குள்ள பறந்துட்டாருங்க...

ஃஃஃ

Tuesday, September 05, 2006

ஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்...

இது ஒரு தாமதமான பதிவுதான். ஆனால் பொருத்தமாக ஆசிரியர் தின நாளில் தான் பதிகின்றேன் என்றே நினைக்கின்றேன்.

கடந்த 02.09.06-ம் தேதி கடந்த வாரம் பிறந்த என் தங்கை மகனை பார்க்க ஊருக்கு சென்றேன். காலை 06.30 மணிக்கு நாகர்கோவில் செல்லும் SETC பஸ்ஸிலிருந்து இறங்கி மகேந்திர கிரி(ISRO) அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காவல் கிணறு சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் எங்கள் ஊர் செல்லும் நகரப் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தேன்.

எனக்கு சற்று தொலைவில் கருத்த நெடிய ஆஜானுபாகுவான நபர் நின்று கொண்டிருந்தார். எங்கோ பார்த்த ஞாபகம்.

ம்....அவரேதான்...ஸ்டீபன் வாத்தியார். எனக்கு 3-ம் வகுப்பு ஆசிரியர். 5-ம் வகுப்பு முடித்த பின் இரண்டு மூன்று முறைதான் பார்த்தது ஆனால் அப்போதெல்லாம் பேசியதில்லை.

அவருக்கு இப்போது என்னை அடையாளம் தெரிகிறதோ இல்லையோ. ஆனால் ஒரு ஆசிரியரின் பெரிய சந்தோசமே “தனக்கு அடையாளம் தெரியாத தனது முன்னாள் மாணவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அந்த ஆசியரைப்பற்றி நலம் விசாரிப்பதுதான்” என்று எனக்கு பாடம் எடுத்த பல ஆசிரியர்கள் சொல்லக்கேட்டு இருக்கின்றேன்.

அவர் அருகில் சென்று “வணக்கம் சார்” என்றேன்.

வணக்கம் தம்பி, நீங்க...என்றவரிடம் என் விபரம் கூறினேன். மிக்க மகிழச்சியடைந்தவராக பேசினார்.

மேலும் சிறிது நேரம் அவரிடம் நின்று பேசிக்கொண்டிருந்தேன். அவரது தூரத்து உறவினரும் கூடவே நின்றார். பேச்சினூடே அவர் தன்னுடைய வெற்றிலை போடும் பழக்கத்தை இரண்டு வருடங்களுக்கு முன் நிறுத்திவிட்டதை அறிந்து சந்தோசப்பட்டேன். காரணம், நான் அவரிடம் 3-ம் வகுப்பு படிக்கும் போதிருந்தே வெற்றிலை போடும் பழக்கத்தை வைத்திருந்தார்.

அவருக்கு தன் பழைய மாணவன் தன்னிடம் வந்து பேசியது எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்குமோ, அதைவிட அதிக சந்தோசத்தை எனக்கு கொடுத்தது அவர் வெற்றிலை போடும் பழக்கத்தை நிறுத்தியது.

அது சரி, அது என்ன “பீச்சாளி சந்திரன்” என்கின்றீர்களா?. இருங்க... இருங்க... அது ஒரு சுவாரஸ்யமான உண்மை கதை. அடுத்த பதிவுல சொல்ரேன்.

அதுவரை நட்புடன். உங்கள் கலை.

Sunday, August 27, 2006

சிந்திப்பார்களா இந்த தறுதலைகள்!...

சென்ற வாரம் போல் இந்த வாரமும் அம்மா மண்டபம் சென்று காவிரியில் நீராடிவிட்டு வரலாம் என்று நேற்று மாலையே தோன்றியது.
அந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்ததால் உடன் பணிபுரியும் நண்பர் திரு.தர்மலிங்கத்திடம் “நாளை அம்மா மண்டபம் சென்று காவிரியில் நீராடிவிட்டு வரலாமா?” என்றேன்.
அவர் “நாளை விநாயகர் சதுர்த்தி. வீட்டில் சாமி கும்பிட வேண்டும் சார். அடுத்த வாரம் போகலாமே” எனறார்.
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும் காவிரிக்கு செல்வது பற்றியே சிந்தனை இருந்தது.
“நாளை அம்மா மண்டபம் சென்று காவிரியில் நீராடிவிட்டு வரலாமா?” என்று என் மனைவியிடம் கேட்டேன்.
அவள் என்னைப் பார்த்த பார்வையில் இருந்த, “எங்கயும் வெளிய போயிட்டு வருவோமா என்று நீங்களாக கேட்க மாட்டீர்களே, நான் கேட்டாலும் அந்த வேலை இந்த வேலை என்று...., இன்று மட்டும் எப்படி?...” என்ற உள் அர்த்தம் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது.
வாண்டுகள் இரண்டும் “போகலாம் பா...போகலாம் பா...” என்றார்கள்.

இன்று காலையிலேயே (07.30am) எழுந்து TV-யில் செய்தி, திரைவிமர்சனம், அப்புரம் தமிழ் பேசிய Speed திரைப்படம், விஜயில் ஜாக்கி ஜான் திரைப்படம் என மாற்றி மாற்றி பார்த்து விட்டு மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு 03.45 மணிக்கெல்லாம் அம்மா மண்டபத்தில் காவிரியில் குழந்தைகளுடன் சேர்ந்து நீராட ஆரம்பித்து விட்டேன். என் மனைவி கரையிலேயே உட்கார்ந்து விட்டார்கள்.
கூட்டம் இன்று அதிகமாக இல்லை. ஐந்தாறு பெண்கள். சுமார் 25 ஆண்கள். குளித்துக்கொண்டிரிந்த ஆண்களில் முக்கால் வாசிபேர் ஜட்டி மட்டுமே அணிந்திருந்தனர். என்னோடு சேர்த்து சிலர் மட்டுமே துண்டு அல்லது அரைக்கால் சட்டை அணிந்திருந்தனர். அதிலும் சில இளைஞர்கள் பெண்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில் சென்று ஒருவரை ஒருவர் தண்ணீருக்கு மேல் தூக்கி விளையாண்டு கொண்டு இருந்தனர். அதுவும் அவர்களின் ஜட்டியை வெளிக்காட்டுவதிலேயே கவனமாக செயல்பட்டனர். அவர்களின் செயல் எனக்கே அருவருப்பாக இருந்தது. அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு எப்படி இருந்திருக்குமோ?.
நான் என் குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தின் அருகில் அவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களிடம் “பெண்கள் குளிக்கிற இடத்துல நின்னு இப்படி குளிக்கிறீங்களே அந்தப்பக்கம் போகக்கூடாதா?” என்றவுடன் ஒன்றும் சொல்லாமல் ஆனாலும் ஏதோ முனுமுனுத்துக் கொண்டு சற்று நகர்ந்து சென்றார்கள்.
மீண்டும் நான் என் குழந்தைகளுக்கு நீச்சல் பழகிக்கொடுப்பதைத் தொடர்ந்தேன். அந்த இளைஞர்களின் செயல் தொடர்ந்து கோண்டே தான் இருந்தது. நான் கரையேரி உடை மாற்றும் போதும் அவர்கள் அவ்விதமே தங்கள் செயலை தொடர்வதை கவனிக்க முடிந்தது.
நாங்கள் எங்கள் பைக் நின்று கொண்டிகுந்த இடத்திற்கு வந்து நான் பைக்கை எடுத்துக் கொண்டிருந்த போது என் மனைவி,
“ஏங்க இந்த பையன்க இப்படி அசிங்கமா, அருவருப்பா குளிச்சிக்கிட்டு, விளையாடிகிட்டு இருக்கான்க. அவங்க அக்கா தங்கச்சி முன்ன இப்படி குளிப்பான்களா? அல்லது அவங்க அக்கா தங்கச்சி முன்ன யாராவது இப்படி அசிங்கமா, அருவருப்பா குளிச்சிக்கிட்டு, விளையாடிகிட்டு இருந்தா இவன்களுக்குத்தான் எப்படி இருக்கும். குளிச்சிக்கிட்டு வெளிய போன ஒரு அம்மா கூட எவ்வளவு வருத்தப்பட்டுகிட்டு இவனுங்க பிறப்பைப் பற்றிக் கூட எவ்வளவு கேவலமா பேசிக்கிட்டு போனாங்க தெரியுமா?” என்றாள்.
எனக்கும் கூட அந்த அம்மா இவனுங்க பிறப்பைப் பற்றிக் கேவலமா பேசிக்கிட்டு போனதும் சரியோ?! என்று எண்ணத்தோன்றியது.
ஆம்... நல்ல பண்பு நலன் கொண்ட தாய் தந்தையர் தங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்திபுப்பார்கள்.
இவர்களைப் போன்ற தரங்கெட்டவர்கள் என்று தான் திருந்துவார்களோ?
இவர்கள் திருந்துவது இருக்கட்டும் திருத்துபவர்களுக்காவது தகவல் சொல்வோம் என்று தோன்றியதால் 100-க்கு போன் செய்து தகவலைக் கூறிவிட்டு வீட்டை நோக்கி பயணித்தேன்.

Monday, August 21, 2006

அம்மா மண்டபம்!...

திருச்சிக்கு வேலை மாற்றலாகி வந்து இரண்டு ஆண்டுகளும் இரண்டு மாதங்களும் ஓடிவிட்டது. உண்மையில் நான் மாற்றல் கேட்டது சென்னைக்கு. ஆனால் உத்தரவு கிடைத்தது திருச்சிக்கு.

திருச்சிக்கு பணியிட மாறுதலில் வரப்போகின்றோம் என்பது தெரிந்த பின் இரவு துக்கத்திற்கு முன் தினம் கனவு தான், திருச்சிக்கு வந்த பின் அன்றாடம் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி.

தினம் அதிகாலை காவிரியில் குழந்தைகளோடு நீந்தி சுகமான நீராடல், வாரம் ஒருமுறையேனும் ஸ்ரீரங்கநாதர், உச்சிப்பிள்ளையார் தரிசனம், மாதந்தோரும் கல்லணை, தஞ்சாவூர் பிக்னிக், இன்ன பிற... கனவுகள்.

ஆனால் திருச்சி வந்த பின் காவிரி குளியல் எனக்கு கானல் நீராகிப்போனது. எப்போதாவது காவிரியில் தண்ணீர் திருச்சியை எட்டிப்பார்க்கும் போது நான் வேலை நிமித்தமாக சென்னை அல்லது பெங்களூரில் இருந்து கொண்டிருப்பேன்.

ஆறு மாதத்திற்கு முன் ஒருமுறை கிடைத்த சந்தற்பத்தில் மனைவி, குழந்தைகள் சகிதம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சென்று வந்தேன். அப்போது நீராட முடிய வில்லை.

இரண்டாவது முறையாக இன்று மீண்டும் அம்மா மண்டபம் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.

நேற்று அலுவல் முடித்து வீட்டிற்கு புறப்படும் போதுதான் உடன் பணிபுரியும் நண்பர் திரு. தர்மலிங்கம், "சார் நாளைக்கு காலையில காவிரிக்கு குளிக்க போகலாமா சார் " என்றார்.

சந்தோசமாக, "போயிட்டு வருவோம் சார் " என்றேன்.

"சார் நானும் வர்ரேன் சார்" என்றார் எங்களின் ஜூனியர் சுரேஷ்.

மூவரும் காலையில் ஏழுமணிக்கு TVS-டோல் கேட் அருகில் ஒன்று கூடி அதன் பின் அம்மா மண்டபம் சென்று குளிக்கலாம் என்று முடிவானது.

நான் வீட்டிற்கு வந்து குழந்தைகளிடம் காவிரிக்கு குளிக்கச் செல்லும் தகவலை சொல்ல குளந்தைகளும் அணிசேர்ந்து கொண்டனர்.

காலையில் 06.45 மணிக்கு செல்பேசி சிணுங்கியது. நல்ல தூக்கம். அரைத்தூக்கத்திலேயே அதன் சிணுங்கலை நிறுத்திவிட்டு மீண்டும் தூக்கம்.

மறுபடியும் 07.00 மணி, 07.15 மணி, 07.25 மணிக்கு செல்பேசி சிணுங்கவே ஒரு வழியாக எழுந்து அவசர அவசரமாக புறப்பட என் மகன் ஆதித்யாவும் கூடவே பைக்கில் ஒட்டிக்கொண்டான்.




அம்மா மண்டபம் சென்று சேர்ந்த போது மணி 08.00 ஆகிவிட்டது.
கூட்டம் நிறைய இருந்தது. நிறைய பேர் தர்பணம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

நண்பர்கள் இருவரும் நீராடிக்கொண்டிருந்தார்கள். நானும் ஆதியும் அவசர அவசரமாக உடைமாற்றிக்கொண்டும் என் செல்பேசியை பத்திரமாக பாண்ட் பாக்கட்டில் சுருட்டி வைத்துவிட்டும் நீராட நண்பர்களோடு கலந்து கொண்டோம்.

காவிரியில் நீர் வரத்து அதிகமாக இருந்தது. தொடர்ந்து ஒரேயிடத்தில் நிற்க முடியாத படி பாதத்திற்கு அடியிலிருந்த மண்ணை நீர் அபகரித்துச்சென்றது. குளியல் சுகமாகவே இருந்தது.
கண்கள் மட்டும் அடிக்கடி செல்பேசியை சுருட்டி வைத்திருந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வந்தது.


நாங்கள் குளித்துக்கொண்டு இருந்த இடத்திற்கும் சற்று கிழக்கு பக்கமாக நின்று ஒல்லியான தேகம் கொண்ட மனிதர் மட்டும் தன் கையில் இருந்த தூண்டிலில் அரைத்த சாதத்தை சிறிது எடுத்து தூன்டிலில் ஒட்டி தண்ணீரில் விசுவதும் மீனை பிடிப்பதுமாக தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவர் மீனைப் பிடித்த லாவகமும் சுறுசுறுப்பும் அழகும் இன்னும் கண்ணைவிட்டு மறைய மறுக்கின்றது.



ஒருமணி நேரம் குளித்துவிட்டு கரையேறும் போது அவரை, அனுமதியோடு என் காமரா செல்பேசியில் பதிவு செய்து கொண்டேன்.

அவர் நாங்கள் குளித்து முடிவதற்குள் அந்த ஒரு மணி நேரத்தில் பிடித்த மீனின் மதிப்பு ரூ.100/- இருக்கும்.

உழைப்பவன் எங்கும் பிழைத்துக்கொள்வான்.

Friday, August 18, 2006

சிக்கூன் குனியா...அரசு மெத்தனம் ஏன்?

சிக்கூன் குனியா...
இந்த வார்த்தையை உச்சரிக்காத தமிழ் உள்ளங்கள் மிகக்குறைவு.

இந்த வார்த்தையைக் கேட்ட உடன் ஒரு நிமிடம் உரைந்து போகாத கிராமத்து அப்பாவிகள் அதைவிட மிகக்குறைவு.

அதேபோல் இந்த வார்த்தையைப்பற்றி பசப்பல் வார்த்தைகளை உதிர்க்காத அரசியல் வாதிகளும், மாவட்ட ஆட்சித்தலைவர்களும் மிக அரிது.

ஆச்சரியமான, ஆனால் வெட்கி தலை குனிய வேண்டிய உண்மையும் ஒன்று உள்ளது. அது சிக்கூன் குனியா என்றால் என்னவென்று முழுவதுமாக அறிந்திராத மருத்துவர்கள்.

தமிழகத்தின் தென் மாவட்டத்து மக்கள் இந்த நோயின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டும், தாங்களே தள்ளாடித் தள்ளாடி கரையேறிக்கொண்டும் இருக்கின்றார்கன்.

ஆனால் நோயைக்கட்டுப்படுத்த வேண்டிய அரசும் அரசு எந்திரங்களும் நோயைப்பற்றிய உண்மைகளை மறைப்பதிலேயே காலத்தை விரையம் செய்துகொண்டிருக்கின்றன.

புத்திசாலிகளான தென்மாவட்டத்தைச்சார்ந்த பல மருத்துவர்களோ தங்கள் வியாபாரத்தில் நல்ல அறுவடையை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

சிக்கூன் குனியா அவ்வளவு கொடிய நோயா? என்றால் அதுவும் உண்மைதான். ஆனால் அரசு அஞ்சி நடுங்கி உண்மைகளை மறைக்கும் அளவுக்கு உயிர் போக்கும் கொடிய நோய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

என் அனுபவத்திலிருந்தும் நான் விசாரித்த பல நூறு சிக்கூன் குனியா பாதித்த நோயாளிகள் சொன்ன விபரங்களிலிருந்தும், நோயைப்பற்றிய சில உண்மைகள், "சிக்கூன் குனியாவினால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை கடுமையான ஜூரத்திற்கு உட்படுகின்றார்கள், கூடவே உடலில் உள்ள அத்தனை மூட்டுக்களிலும் தாங்க முடியாத வலி. இந்த மூட்டு வலி ஒரு வாரம் முதல் ஆறு மாதம் வரை தொடரலாம். நோய் வாய்ப்பட்டவர் காலைக்கடனை கழிக்கச்செல்ல மற்றவர் துணை தேவைப்படலாம் [இதில் தப்பிப்பிழைப்பவர் உண்மையில் புண்ணியம் தெய்தவராவார்]. பலருக்கு மூட்டு வீக்கமும் ஏற்படுகின்றது. கொஞ்சம் குண்டானவர்கள் பாடுதான் திண்டாட்டம்".

ஆனால் இரண்டு மூன்று நாட்கள் சாதாரண பாராசிட்டகால் மாத்திரை எடுத்துக்கொண்டாலேயே காய்ச்சல் குணமாகிவிடுகிறது. அல்லது ஊசி போட்டுக்கொள்ளலாம் (பாராசிட்டமால் தான்). வலிக்கு ப்ரூபின்(IBUPROFEN) எடுத்துக்கொள்ளலாம். கூடவே ப்ரூபினால் பக்கவிளைவு ஏற்படாமல் இருக்க மாத்திரை சாப்பிடுவதும் உத்தமம்.

சிக்கூன் குனியா பற்றிய உண்மைகள் இவ்வாறு இருக்க அரசின் கையாலாகாத்தனத்தாலும், நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் அரசு ஏற்படுத்த தவறியதாலும் மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய தவறான எண்ணமும் பய உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது. இது மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய வேண்டாத பீதியையும் கலக்கத்தையுமே ஏற்படுத்துவதுடன் அரசு மீதும் மக்களுக்குள்ள நல்லெண்ணெத்தையும் சீர்குலைப்பதாகவே அமையும். எனவே அரசு இனியேனும் விரைந்து நடவடிக்கை எடுத்து சிக்கூன் குனியா பரவலாக உள்ளதை பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டு, அந்நோய் பரவால் தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, அந்நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியையும் மக்களிடம் ஏற்படுத்த முனைய வேண்டும். இது ஒன்றும் உயிர்க்கொல்லி நோய் இல்லை என்பதையும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

செய்யுமா அரசு. அல்லது மீண்டும் தமிழ் நாட்டில் சிக்கூன் குனியா இல்லை என்ற பழைய பல்லவியையே பாடப்போகின்றார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

பி.கு:- எங்கள் ஊரில் 95% சதவீதம் பேருக்கு சிக்கூன் குனியா தாக்கியது. எங்கள் குடும்பத்தில் அனைவரையும் நோய் தாக்கியது. அப்பா இறந்த போது(26.07.2006) ஊர் சென்றுவந்த எனக்கும் என் வீட்டிலுள்ள அனைவருக்கும் சிக்கூன் குனியா வந்து இப்போதுதான் குணமடைந்து வருகிறோம்.