சிந்திப்பார்களா இந்த தறுதலைகள்!...
சென்ற வாரம் போல் இந்த வாரமும் அம்மா மண்டபம் சென்று காவிரியில் நீராடிவிட்டு வரலாம் என்று நேற்று மாலையே தோன்றியது.
அந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்ததால் உடன் பணிபுரியும் நண்பர் திரு.தர்மலிங்கத்திடம் “நாளை அம்மா மண்டபம் சென்று காவிரியில் நீராடிவிட்டு வரலாமா?” என்றேன்.
அவர் “நாளை விநாயகர் சதுர்த்தி. வீட்டில் சாமி கும்பிட வேண்டும் சார். அடுத்த வாரம் போகலாமே” எனறார்.
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும் காவிரிக்கு செல்வது பற்றியே சிந்தனை இருந்தது.
“நாளை அம்மா மண்டபம் சென்று காவிரியில் நீராடிவிட்டு வரலாமா?” என்று என் மனைவியிடம் கேட்டேன்.
அவள் என்னைப் பார்த்த பார்வையில் இருந்த, “எங்கயும் வெளிய போயிட்டு வருவோமா என்று நீங்களாக கேட்க மாட்டீர்களே, நான் கேட்டாலும் அந்த வேலை இந்த வேலை என்று...., இன்று மட்டும் எப்படி?...” என்ற உள் அர்த்தம் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது.
வாண்டுகள் இரண்டும் “போகலாம் பா...போகலாம் பா...” என்றார்கள்.
இன்று காலையிலேயே (07.30am) எழுந்து TV-யில் செய்தி, திரைவிமர்சனம், அப்புரம் தமிழ் பேசிய Speed திரைப்படம், விஜயில் ஜாக்கி ஜான் திரைப்படம் என மாற்றி மாற்றி பார்த்து விட்டு மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு 03.45 மணிக்கெல்லாம் அம்மா மண்டபத்தில் காவிரியில் குழந்தைகளுடன் சேர்ந்து நீராட ஆரம்பித்து விட்டேன். என் மனைவி கரையிலேயே உட்கார்ந்து விட்டார்கள்.
கூட்டம் இன்று அதிகமாக இல்லை. ஐந்தாறு பெண்கள். சுமார் 25 ஆண்கள். குளித்துக்கொண்டிரிந்த ஆண்களில் முக்கால் வாசிபேர் ஜட்டி மட்டுமே அணிந்திருந்தனர். என்னோடு சேர்த்து சிலர் மட்டுமே துண்டு அல்லது அரைக்கால் சட்டை அணிந்திருந்தனர். அதிலும் சில இளைஞர்கள் பெண்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில் சென்று ஒருவரை ஒருவர் தண்ணீருக்கு மேல் தூக்கி விளையாண்டு கொண்டு இருந்தனர். அதுவும் அவர்களின் ஜட்டியை வெளிக்காட்டுவதிலேயே கவனமாக செயல்பட்டனர். அவர்களின் செயல் எனக்கே அருவருப்பாக இருந்தது. அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு எப்படி இருந்திருக்குமோ?.
நான் என் குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தின் அருகில் அவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களிடம் “பெண்கள் குளிக்கிற இடத்துல நின்னு இப்படி குளிக்கிறீங்களே அந்தப்பக்கம் போகக்கூடாதா?” என்றவுடன் ஒன்றும் சொல்லாமல் ஆனாலும் ஏதோ முனுமுனுத்துக் கொண்டு சற்று நகர்ந்து சென்றார்கள்.
மீண்டும் நான் என் குழந்தைகளுக்கு நீச்சல் பழகிக்கொடுப்பதைத் தொடர்ந்தேன். அந்த இளைஞர்களின் செயல் தொடர்ந்து கோண்டே தான் இருந்தது. நான் கரையேரி உடை மாற்றும் போதும் அவர்கள் அவ்விதமே தங்கள் செயலை தொடர்வதை கவனிக்க முடிந்தது.
நாங்கள் எங்கள் பைக் நின்று கொண்டிகுந்த இடத்திற்கு வந்து நான் பைக்கை எடுத்துக் கொண்டிருந்த போது என் மனைவி, “ஏங்க இந்த பையன்க இப்படி அசிங்கமா, அருவருப்பா குளிச்சிக்கிட்டு, விளையாடிகிட்டு இருக்கான்க. அவங்க அக்கா தங்கச்சி முன்ன இப்படி குளிப்பான்களா? அல்லது அவங்க அக்கா தங்கச்சி முன்ன யாராவது இப்படி அசிங்கமா, அருவருப்பா குளிச்சிக்கிட்டு, விளையாடிகிட்டு இருந்தா இவன்களுக்குத்தான் எப்படி இருக்கும். குளிச்சிக்கிட்டு வெளிய போன ஒரு அம்மா கூட எவ்வளவு வருத்தப்பட்டுகிட்டு இவனுங்க பிறப்பைப் பற்றிக் கூட எவ்வளவு கேவலமா பேசிக்கிட்டு போனாங்க தெரியுமா?” என்றாள்.
எனக்கும் கூட அந்த அம்மா இவனுங்க பிறப்பைப் பற்றிக் கேவலமா பேசிக்கிட்டு போனதும் சரியோ?! என்று எண்ணத்தோன்றியது.
ஆம்... நல்ல பண்பு நலன் கொண்ட தாய் தந்தையர் தங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்திபுப்பார்கள்.
இவர்களைப் போன்ற தரங்கெட்டவர்கள் என்று தான் திருந்துவார்களோ?
இவர்கள் திருந்துவது இருக்கட்டும் திருத்துபவர்களுக்காவது தகவல் சொல்வோம் என்று தோன்றியதால் 100-க்கு போன் செய்து தகவலைக் கூறிவிட்டு வீட்டை நோக்கி பயணித்தேன்.