ஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்...
இது ஒரு தாமதமான பதிவுதான். ஆனால் பொருத்தமாக ஆசிரியர் தின நாளில் தான் பதிகின்றேன் என்றே நினைக்கின்றேன்.
கடந்த 02.09.06-ம் தேதி கடந்த வாரம் பிறந்த என் தங்கை மகனை பார்க்க ஊருக்கு சென்றேன். காலை 06.30 மணிக்கு நாகர்கோவில் செல்லும் SETC பஸ்ஸிலிருந்து இறங்கி மகேந்திர கிரி(ISRO) அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காவல் கிணறு சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் எங்கள் ஊர் செல்லும் நகரப் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தேன்.
எனக்கு சற்று தொலைவில் கருத்த நெடிய ஆஜானுபாகுவான நபர் நின்று கொண்டிருந்தார். எங்கோ பார்த்த ஞாபகம்.
ம்....அவரேதான்...ஸ்டீபன் வாத்தியார். எனக்கு 3-ம் வகுப்பு ஆசிரியர். 5-ம் வகுப்பு முடித்த பின் இரண்டு மூன்று முறைதான் பார்த்தது ஆனால் அப்போதெல்லாம் பேசியதில்லை.
அவருக்கு இப்போது என்னை அடையாளம் தெரிகிறதோ இல்லையோ. ஆனால் ஒரு ஆசிரியரின் பெரிய சந்தோசமே “தனக்கு அடையாளம் தெரியாத தனது முன்னாள் மாணவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அந்த ஆசியரைப்பற்றி நலம் விசாரிப்பதுதான்” என்று எனக்கு பாடம் எடுத்த பல ஆசிரியர்கள் சொல்லக்கேட்டு இருக்கின்றேன்.
அவர் அருகில் சென்று “வணக்கம் சார்” என்றேன்.
வணக்கம் தம்பி, நீங்க...என்றவரிடம் என் விபரம் கூறினேன். மிக்க மகிழச்சியடைந்தவராக பேசினார்.
மேலும் சிறிது நேரம் அவரிடம் நின்று பேசிக்கொண்டிருந்தேன். அவரது தூரத்து உறவினரும் கூடவே நின்றார். பேச்சினூடே அவர் தன்னுடைய வெற்றிலை போடும் பழக்கத்தை இரண்டு வருடங்களுக்கு முன் நிறுத்திவிட்டதை அறிந்து சந்தோசப்பட்டேன். காரணம், நான் அவரிடம் 3-ம் வகுப்பு படிக்கும் போதிருந்தே வெற்றிலை போடும் பழக்கத்தை வைத்திருந்தார்.
அவருக்கு தன் பழைய மாணவன் தன்னிடம் வந்து பேசியது எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்குமோ, அதைவிட அதிக சந்தோசத்தை எனக்கு கொடுத்தது அவர் வெற்றிலை போடும் பழக்கத்தை நிறுத்தியது.
அது சரி, அது என்ன “பீச்சாளி சந்திரன்” என்கின்றீர்களா?. இருங்க... இருங்க... அது ஒரு சுவாரஸ்யமான உண்மை கதை. அடுத்த பதிவுல சொல்ரேன்.
அதுவரை நட்புடன். உங்கள் கலை.